Thursday, October 28, 2010

சில நிமிடங்களை...


தென்றலில் மனம் தொலைத்தது போக ,

கனவுகளில் கவிதைகள் தொலைந்தது போக ,

வேளையில் நேரம் தொலைத்தது போக ,

விளையாட்டில் நேரம் தொலைத்தது போக

நான் சேமித்து வைத்த சில நிமிடங்களை இன்று

காதலில் தொலைக்கிறேன்....



Saturday, October 23, 2010

கண்ணீர் பொம்மை ...





















உயிர்த் திரவம்
கண்ணீர் திவளைகளாய்
மாறி மண் சுடும்
நேரம் இது!
எங்கள் இழப்பு, வலி ,பசி
எல்லாம் மறந்து ,
இதோ! என் தமிழன்
இன்னொரு தீபாவளி
கொண்டாடத் தயாராகிவிட்டான் .
ஈழத்தில்,நாங்களோ!
நாங்கள் வாழ்ந்த தேசத்தில்
இழந்த உயிர்களை இன்னும்
எண்ணிக்கொண்டு...
அடுத்த முறை பிறக்குமா?
எனக்கு என் அதே குழந்தை!
இல்லையெனில்
நான் இழந்ததை திருப்பித்தா .அது போதும்.
தவமாய்த் தவமிருந்து
தவிப்பிலே யான் பெற்ற இன்பம்
நெருப்பிலே வெந்து போனது யார் குற்றம்?
போர் நிறுத்தப் பிறந்த புத்தன் என
நான் நினைத்துப் பெற்றது குற்றமா?
பூமி ஆளப் பிறந்து ,
வானம் பார்த்துக் கிடக்கும்
என் மன்னவன் குற்றமா?
இனியொரு முறை பூக்குமோ?
இன்னொருமுறை
உயிர்வலி கிடைக்குமோ? ஐயோ !
இனி என் கருப்பை,
கரியமிலக் காற்றடைத்த வெறும் பை!
தாயே! என் கருவறையில் தனி அறை
உண்டெனச் சொல்!
என் தமிழினத்தின் வாரிசை
நின்றெழச் செய்கிறேன்.

அன்று,
எனக்கும்,அவருக்குமான
எங்கள் தனிமையை
நிர்வாணமாக்கிய இரவுகளில்,
மூன்றாமவனால்
நிர்மூலமாக்கப் பட்ட
அந்த நிமிடங்களில்
நான் செத்துப் போனேன்.
இன்று மீண்டும் ஒரு முறை
என் மைந்தனை இழந்து...

பயம். இறைப்பெருந்தகை
எமக்களித்த தனிப்பெரும் வரம்.
எம் பிள்ளைகளின் வயிற்றுப் பசியும்
எங்கள் காயத்தின் வலியையும்
மறக்கச் செய்யும் மந்திரமாய்
அவன் தந்த அருமருந்து!
அதன் போதையில் தான்
அனேக நேரங்கள் நாங்கள்
உறங்கிப் போகிறோம்.

எம் பிள்ளைகள்
புத்தகம்,நீர்குப்பி விடுத்து
வீதி விளையாட்டை மறந்து
துப்பாக்கி தோட்டாக்களுக்கு
மத்தியில் துறவு மேற்கொண்ட
விதி விளையாட்டை என் செய்வேன்?
என் தாயே!
உன் சோலை தேசத்தின், பாலைநிலத்தில்
உறவுகளற்ற ஊர்குருவிகளாய் நாங்கள்!
எங்கள் ஈழத்து இழவு காக்கும்
கண்ணீர் பொம்மையாய் நீ.







Monday, October 4, 2010

இன்று புதிதாய்ப் பிறந்தேன் .


என் தாய் அவள் மகிழ ,
என் தந்தை அன்பால்
எனைக் கட்டி முத்தமிட,
என் அண்ணன் அழகாய் ரசித்திட,
என் நண்பன் என்னில்
நேரங்கள் தொலைத்து நட்பு பேச ,
பரிசாய் நான் இன்று பிறந்தேன்...
நான் வணங்கும் கோவில் என் குடும்பம் ,
நான் சம்பாதித்த கோடிகள் என் நண்பர்கள்
எத்தனை முறை முட்டை வாங்கினாலும்
என்னை முதல்வனாக்கிட ஆசிகள் தரும் ஆசான்
இத்தனையும் இனிதாய் தந்த என் இறைவா
உன் அத்தனைக்கும் நன்றி சொல்ல
இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
என் தாய்க்கு நான்
நான் சிறகுகள் இல்லாத தேவதை.
என் தந்தைக்கு, நான்
புது உறவு சொல்லும் வாரிசுப் பொக்கிஷம்
என் சகோதரனுக்கு,நான்
தொட்டுப் பேசச் சொல்லும் குட்டி பொம்மை
அன்பன் நண்பனுக்கு,
உன்னைப் போல் ஒருவன்
நானும் நீயும் என்றுமே நண்பனாய்....
என் காதலிக்கு , நான் முற்றுப் பெறாத முடிவிலியாய்
என் ஆசானிடம் , முட்டை வாங்கி
ஆதியும் அந்தமும் சொல்லும் "முதல்வனாய்" ...
இப்படி எல்லோருக்கும் எல்லாமுமாக நானிருக்க
இன்று புதியதாய் பிறந்தேன்...