Sunday, November 14, 2010

துளிகள்...


கடல் அலையின்
இரு நீர்த்துளிகள் கரையில்,
காதலர்கள்!


ஒரு கடல் தேசத்தின்
காதல் குருவிகளுக்கு
இறை தந்த
இரை , காதல் .

இரு துளிகள் ஒரு கடலாய்,
ஒரு கடலே மனம் கவர் காதலாய்.

வானில் நட்சத்திரதிரங்களுக்கு ஒரு நிலா
எங்கள் காதல் நட்சத்திரங்களுக்கு
எது நிலா?
வீதி நட்சத்திரங்கள் மின்னும்
காதல் தான் எங்கள் நிலா.

பூக்களைக் கொடுத்து காதல்
மொழிவதில் நானும் என்னவளும்
உடன்படுவதில்லை.
எங்கள் காதலுக்காய்
இன்னோர் உயிர்க்கொலை எதற்கு!

மௌன மொழி எங்களின் காதல்
சொல்லும் கடவுளின் தீர்க்கம் .



Thursday, October 28, 2010

சில நிமிடங்களை...


தென்றலில் மனம் தொலைத்தது போக ,

கனவுகளில் கவிதைகள் தொலைந்தது போக ,

வேளையில் நேரம் தொலைத்தது போக ,

விளையாட்டில் நேரம் தொலைத்தது போக

நான் சேமித்து வைத்த சில நிமிடங்களை இன்று

காதலில் தொலைக்கிறேன்....



Saturday, October 23, 2010

கண்ணீர் பொம்மை ...





















உயிர்த் திரவம்
கண்ணீர் திவளைகளாய்
மாறி மண் சுடும்
நேரம் இது!
எங்கள் இழப்பு, வலி ,பசி
எல்லாம் மறந்து ,
இதோ! என் தமிழன்
இன்னொரு தீபாவளி
கொண்டாடத் தயாராகிவிட்டான் .
ஈழத்தில்,நாங்களோ!
நாங்கள் வாழ்ந்த தேசத்தில்
இழந்த உயிர்களை இன்னும்
எண்ணிக்கொண்டு...
அடுத்த முறை பிறக்குமா?
எனக்கு என் அதே குழந்தை!
இல்லையெனில்
நான் இழந்ததை திருப்பித்தா .அது போதும்.
தவமாய்த் தவமிருந்து
தவிப்பிலே யான் பெற்ற இன்பம்
நெருப்பிலே வெந்து போனது யார் குற்றம்?
போர் நிறுத்தப் பிறந்த புத்தன் என
நான் நினைத்துப் பெற்றது குற்றமா?
பூமி ஆளப் பிறந்து ,
வானம் பார்த்துக் கிடக்கும்
என் மன்னவன் குற்றமா?
இனியொரு முறை பூக்குமோ?
இன்னொருமுறை
உயிர்வலி கிடைக்குமோ? ஐயோ !
இனி என் கருப்பை,
கரியமிலக் காற்றடைத்த வெறும் பை!
தாயே! என் கருவறையில் தனி அறை
உண்டெனச் சொல்!
என் தமிழினத்தின் வாரிசை
நின்றெழச் செய்கிறேன்.

அன்று,
எனக்கும்,அவருக்குமான
எங்கள் தனிமையை
நிர்வாணமாக்கிய இரவுகளில்,
மூன்றாமவனால்
நிர்மூலமாக்கப் பட்ட
அந்த நிமிடங்களில்
நான் செத்துப் போனேன்.
இன்று மீண்டும் ஒரு முறை
என் மைந்தனை இழந்து...

பயம். இறைப்பெருந்தகை
எமக்களித்த தனிப்பெரும் வரம்.
எம் பிள்ளைகளின் வயிற்றுப் பசியும்
எங்கள் காயத்தின் வலியையும்
மறக்கச் செய்யும் மந்திரமாய்
அவன் தந்த அருமருந்து!
அதன் போதையில் தான்
அனேக நேரங்கள் நாங்கள்
உறங்கிப் போகிறோம்.

எம் பிள்ளைகள்
புத்தகம்,நீர்குப்பி விடுத்து
வீதி விளையாட்டை மறந்து
துப்பாக்கி தோட்டாக்களுக்கு
மத்தியில் துறவு மேற்கொண்ட
விதி விளையாட்டை என் செய்வேன்?
என் தாயே!
உன் சோலை தேசத்தின், பாலைநிலத்தில்
உறவுகளற்ற ஊர்குருவிகளாய் நாங்கள்!
எங்கள் ஈழத்து இழவு காக்கும்
கண்ணீர் பொம்மையாய் நீ.







Monday, October 4, 2010

இன்று புதிதாய்ப் பிறந்தேன் .


என் தாய் அவள் மகிழ ,
என் தந்தை அன்பால்
எனைக் கட்டி முத்தமிட,
என் அண்ணன் அழகாய் ரசித்திட,
என் நண்பன் என்னில்
நேரங்கள் தொலைத்து நட்பு பேச ,
பரிசாய் நான் இன்று பிறந்தேன்...
நான் வணங்கும் கோவில் என் குடும்பம் ,
நான் சம்பாதித்த கோடிகள் என் நண்பர்கள்
எத்தனை முறை முட்டை வாங்கினாலும்
என்னை முதல்வனாக்கிட ஆசிகள் தரும் ஆசான்
இத்தனையும் இனிதாய் தந்த என் இறைவா
உன் அத்தனைக்கும் நன்றி சொல்ல
இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
என் தாய்க்கு நான்
நான் சிறகுகள் இல்லாத தேவதை.
என் தந்தைக்கு, நான்
புது உறவு சொல்லும் வாரிசுப் பொக்கிஷம்
என் சகோதரனுக்கு,நான்
தொட்டுப் பேசச் சொல்லும் குட்டி பொம்மை
அன்பன் நண்பனுக்கு,
உன்னைப் போல் ஒருவன்
நானும் நீயும் என்றுமே நண்பனாய்....
என் காதலிக்கு , நான் முற்றுப் பெறாத முடிவிலியாய்
என் ஆசானிடம் , முட்டை வாங்கி
ஆதியும் அந்தமும் சொல்லும் "முதல்வனாய்" ...
இப்படி எல்லோருக்கும் எல்லாமுமாக நானிருக்க
இன்று புதியதாய் பிறந்தேன்...

Thursday, September 30, 2010

புன்னகை தேசம் ...


புன்னகை,
ஒரு பூவிதழ் சிந்தும்
மந்திரப் பொன்னகை.
நூலிழை கோர்த்து நெய்த
பட்டுப் போல , பால்
மழை பொழியும் வானம் போல
என்றும் புதிதாய்
எப்போதும் உண்மையாய் நீ சிரிக்கும்
அந்த அன்புச் சிரிப்பிற்கு ,
நான் ரெக்கைகள் இல்லாத விசிறி.
மரகதப் புன்னகை வீசி
எந்திரமான உலகத்தை
சந்திரவதனம் செய்யும் சரித்திரம் உன் புன்னகை.
கவலை தோய்ந்த எனக்கு கருவாய்
வாய்த்த கவிதை உன் புன்னகை.
ஏழையாகப் பிறந்த உந்தன்
புன்னகை தான் எங்கள் தேசத்தின் அடையாளம்

Wednesday, September 22, 2010

நம் புரிதலில்....




















முடிந்ததாய்ச் சொல்லி

தூரம் போகச் சொல்லும்

உன் மென்மைகளும் ,

ஏமாற்றமாய் இருந்தாலும்

விலகி நின்று வாழ்த்தச் சொல்லும்

என் மௌனங்களும், காதலின் புரிதல் சொல்லும்

கடலோரத்து கவிதைகள் ...

இதமான நம் உணர்வுகளின்

மிதமான காதல் ,பூத்து விழுந்து

பூமியில் புதைந்து கிடக்கிறது....

நாளையும் பூக்கள் பூக்கும் ! அவை

விடுதலை கேட்டு அழும் என் காதலுக்கு

காதலின் புரிதல் பேசும் ,பூக்களாய் சிரித்து நிற்கும்.....




Sunday, August 15, 2010

தாய்ப்பால்...



அயலான் தேசத்தில்
அந்நிய நிறுவனத்தில் என் இந்தியச் சகோதரனுக்கு
சுதந்திரம் சொல்லி இனிப்பை வழங்கிய போது
தவிப்பாய்க் கிடந்தவனுக்கு தாய்ப்பால் கொடுத்த சந்தோஷம்.....

எங்கள் சுதந்திரத்தில் இனி என்றும் ....

எங்கள் சுதந்திரத்தில் இனி...
ஆயிரம் பூக்கள் பூக்கட்டும்
அடிமை விலங்குகள் உடையட்டும் !
பாசக்கரத்தை நாம் நீட்டி
நேசம் மட்டும் நாம் பேசுவோம்!
பாரே போற்றும் பாரதம் ! ஒற்றுமை
பக்குவம் சொல்லும் ஓர் ரதம்!
எனப்பெயர் பெறட்டும்!
எங்கள் சுதந்திரத்தில் இனி என்றும் ....
சிநேகம் என்றும் சிலிர்க்கட்டும்.
சின்னக்குழந்தைகள் சிரிக்கட்டும்
செல்லப் புன்னகை பூக்கட்டும்
சிறகுகள் நம்மில் விறியட்டும்
எங்கள் சுதந்திரத்தில் இனி ....
வானம் முட்டும் சந்தோஷம்
என் ஏழைக்கூலிக்கும் கிடைக்கட்டும்
ஏற்றம் பிடிப்பவன் கைகளுக்கு
நலமாய் எல்லாம் கிடைக்கட்டும்!
எங்கள் சுதந்திரத்தில் இனி ....
தரிசாய் கிடக்கும் நிலமெல்லாம்
பரிசாய் மரங்களை நிரப்புவோம்!
ஆணும் பெண்ணும் சமமென்னும்
அற்புதம் புரிந்து வாழ்வோம்!
எங்கள் சுதந்திரத்தில் இனி....
களவுகள் மனம் திருடுவதாக மட்டும் இருக்கட்டும்!
திருடர்களும் திருந்தட்டும்
கொள்ளைக் காசுகள் வேண்டும் மனம் இல்லாது,
கொடுத்து உதவும் மனங்கள் பிறக்கட்டும்
எங்கள் சுதந்திரத்தில் இனி...
வெள்ளைக்காரன் எங்கள்
வீட்டுக் கூலிக்கு வரட்டும்!
அப்போதும் எங்கள் மனம் விருந்தோம்பல்
மட்டும் பேசட்டும்!
தியாகம் செய்த தியாகிகள்
என் தேசம் வளர்த்த தலைவர்கள்
யாரும் மறவாத சத்தியத்தை நாம் என்றும்
மறவாத மனமிருக்கட்டும்.
எம் இந்தியதேசம் வண்ணமாய்
உலகிற்கு ஒளிக்கட்டும்.
எங்கள் வாழ்த்துக்கள்
வானம் கடந்து நட்சத்திரங்களாய்
பூக்கட்டும் !

Sunday, August 1, 2010

காதலும்,நட்பும்....



நட்பு,
எல்லோரிடமும்
என்னை நேசிக்கச்
சொன்ன இதயம் !



காதல்,
எல்லோரையும் விட்டுவிட்டு
என்னை மட்டும் நேசி
எனச் சொல்லும் இதயம்!

நட்பு,
தோழனை முன்னிறுத்தி
பின்னிருக்க ஆசைப்படும் இதயம் !

காதல் ,
காதலை முன்னிறுத்தி
காதலனை பின்னிறுத்தி
அவன் கைபிடிக்குள்
நிற்க ஆசைப்படும் இதயம்!

நட்பு ,
எவ்வளவு உப்புப்
போட்டு சாப்பிட்டாலும்
வீராப்பு மட்டும் வராது.
திட்டிக்கொண்டாலும்,சண்டை போட்டாலும்,
அந்த நிமிடமே
திரும்பப் பேசிக்கொண்டிருக்கும் இதயம்!

காதல்,
ஒரு முறை பேசவில்லை
என்பதற்காக ஓயாது அழைத்து
பின் ஒரு நாள் முழுதும் பேசாமலிருந்து
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
அடுத்த நாள் அமைதியாக
மன்னிப்பு கேட்கும் இதயம்!

நட்பு,
அன்பில் முடிவில்லாத முடிவிலி.
விட்டு விட முடியாத பாசம் !
அது தான் நட்பு.

காதல்,
அன்பின் சண்டைகள்
முடிவில்லாத முடிவிலி .
விட்டு விலகமுடியாத நேசம்!
அது தான் காதல்.

நட்பு,
சுதந்திரமாய்
பறக்கும் பட்டம்!

காதல்,
சுதந்திரமாய்
பறக்கிறேன் எனச் சொல்லி
கட்டிப் போடப் பட்டிருக்கும்
கொடி!

நட்பு,
எல்லோரும் சமம்
எனச் சொல்லும் இதயம்!

காதல்,
நீயும் நானும் மட்டும் சமம்
எனச் சொல்லும் இதயம்!

காதலுக்கு உதவி தேவை என
நண்பனிடம் வந்த போது
நட்பில் நம்பிக்கை வைத்து
காதல் வெற்றி பெற்றது.
யாருமில்லாமல் நின்றவர்களை
சேர்த்துவைத்த போது
நட்பு வெற்றி பெற்றது!


என்னைப் பொறுத்தவரையில்
காதலுக்கும் , நட்பிற்கும்
ஒரு நூலிழை வித்தியாசம் தான் .
ஆனாலும்,
நட்பு சற்று உயரத்தில்!

கேட்டுப் பாருங்கள் காதலர்களை
தங்களை
சேர்த்து வைத்த நண்பன் பற்றி .....





Saturday, July 31, 2010

நட்பின் பதிவுகள்...


கடந்து போன
நாட்களிலே நடந்து போக
நினைக்கிறது மனசு...
நீயும் நானும் சண்டை போடாத
நாட்கள் இல்லை
ஆனாலும் , நேரம் தெரியாமல் நாம்
சுற்றித் திரிவோம்...
தூரக் கிடக்கும் நட்சத்திரங்களுக்குள்,
நீயும் நானும் எங்கே என
தேடித் பார்த்து தேகம்
சிலிர்த்துக் கிடந்த நாட்கள்
எப்பக்கிடைக்கும் என் நண்பா?

ஊரே பார்க்கும் ஒற்றை நிலாவிடம்
நாங்கள் மட்டுமே நண்பர்கள்
என்று வானம் பார்த்து வள்ளுவம் பேசிய
நாட்கள் எப்பக்கிடைக்கும் நண்பா?

விட்டுச் சென்ற காதலியை
மறக்கச் சொல்லி எனக்காக
கடற்கரையில் கால் நனைத்துக் கிடந்த நாட்கள்.
எனக்கான நட்பு பேசிய அந்த நிமிடங்கள்
எப்பக் கிடைக்கும் நண்பா?

தாமதமாய் கிளம்பியதாய் சொல்லி ,
கழிவறையிலும் ,குளியலறையிலும்
நாம் சண்டை போட்டுக் கொள்ளும் நிமிடங்கள்,
எப்பக் கிடைக்கும் நண்பா?

அவசரவசரமாய் கல்லூரிக்கு
கிளம்புகையில் உன் சட்டையை நானும்
என் சட்டையை நீயும் போட்டு
அழகு பார்த்துக் கொண்ட நாட்கள்
எப்பக் கிடைக்கும் நண்பா?

நீ என் வெற்றிக்குக் காரணம்
என முடித்துக் கொள்ள விரும்பவில்லை.
என் தோல்வியில்
எனக்காக என்னோடு நின்றவன் !
என் கடந்த காலத்தின் அர்த்தமுள்ள
பதிவுகளாய் நம்
நட்பைச் சொல்லிக் கொள்வதில்
பெருமைப் படுகிறேன்....
திரும்பிப் பார்க்கமுடியாத
தூரம் போனதாய்ச் சொல்லி
விரும்பிப் பார்க்கக் காத்திருக்கும் இதயம்,
விடை பெரும் நேரத்தில்
வெறுமைகளை நிரப்பி , விடை பெற்றதும்
நட்பின் நினைவுகளை நிரப்பி வைத்திருக்கும்
ஆள் இல்லாத வகுப்பறைகள்,
கனவுகள் சுமந்து கிடந்தவனின்
கிறுக்கல்களையும் ,ஓவியங்களையும்
சுமந்து நிற்கும் வகுப்பறை நாற்காலிகள்,
திருப்பிக் கொடுக்காத
டீக்கடைக்காரன் பைசா பாக்கி ,
சோடி சேர்ந்த கல்லூரிக்காதல்,
சொல்லாமல் பிரிந்த உண்மைக்காதல்,
தேர்வுக்குப் படிக்காமல்
உன்னைப் பார்த்து தேர்வு எழுதி
நான் மட்டும் தேறியதாய் தெரிந்ததும்
உனக்கு ஆறுதல் கூறிய நிமிடங்கள்,
கல்லூரிவிழா , களித்துக் கிடந்த வெற்றிகள் ,
கலங்கிப்போன தோல்விகள்
எல்லாவற்றிற்கும் இடையில்
எனக்காக எப்போதும் நிற்கும்
உன் தோழமையின் ஆளுமை!

எல்லாம்..
திரும்பிப்பார்க்கையிலே,
தூரத்தில சின்னமா
ஒரு புள்ளியாக ...
அந்த நினைப்பு தான் நட்பா நண்பா ?
என் அன்புக்கினியவனே
எப்பக் கிடைக்கும் அந்த
அழகிய தருணம் ?முடிந்ததாய்
என் வார்த்தைகளுக்குப் புள்ளிகள்
வைக்கும் போது
உனக்குள் தொடந்திருக்கும்
நம் தோழமை நினைவுகளின் ஆளுமை!
நண்பா !
எங்கேயடா நாம்
துள்ளித்திரிந்த நாட்கள்?....

Thursday, July 29, 2010

கார்காலம்.....


கார்காலம்
காதல் தேசத்திற்கு
கடவுளின் கொடை !
மழைக்காலம்!
சின்னஞ்சிறுசுகளுக்கு
விழாக்காலம்!
என் பருவத்துச் சிட்டுகளுக்கு
இது மட்டுமே காலம்!

மழை வரும், மண் வாசம் வரும்.
மனம் ஏதேதோ பேச வரும்.
கப்பல் விடச் சொல்லும்,
காதலிக்கச் சொல்லும்,
குடைக்குள் நடக்க ஆசைப்படும்
கொட்டும் மழை பார்த்ததும்
குற்றாலத்தில் குளிக்கும் ஆசை வரும்!
குடை விட்டெறிந்து கொண்டாட்டம்
போடச் சொல்லும்.

கங்கையோ,காசியோ...
கடைக்கோடி காவிரியோ !
தேடிச் செல்ல விதி இல்லை.
நீ எங்கள் தேகம் நனைத்து
பருவத்தின் பாவம் கழுவினாய்!

அக்கரை வானத்தின்
சர்க்கரை நீர்பட்டு
இக்கரை தேசம் பூத்துக் கிடக்குது
புது உலகம் காணுது!

உன்னில் நனைந்து நனைந்து
காதலின் சுவாரசியம்
பேசிக்கொள்ள இனி
எனக்கும் அவளுக்குமாய்
மழைக்காலம் தினம் தினம் வருக.....

Wednesday, July 28, 2010

அப்பத்தா இருந்திருக்கலாம்....


அப்பத்தா!
என் அப்பாவைப் பெற்றவள்,
இன்னும் சிலகாலம் இருந்திருக்கலாம்!
போய்விட்டாள் புது உலகம் தேடி!
ஊரே மெச்சும் அழகியாம் என் அப்பத்தா!

அய்யாவிற்கு அப்பத்தா
கிடைத்தது போல
என் அப்பாவிற்கு என் அம்மா கிடைத்தார்.
தன்னை விட அழகாய் மருமகள் வந்தால் என நினைக்காமல்
தாயாகவே இருந்து வந்தாளாம் .
அண்ணாவைத் தூக்கி வளர்த்தவள்
ஐயோ, நான் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே போய்விட்டாள்.
என் அப்பத்தா போய்விட்டாள்.

தங்கமாய் நான் சிரிக்க தாலாட்டத் தாய் இருக்காள்
தரணி ஆளச் சொல்ல
எனக்காக என்
அப்பத்தா இருந்திருக்கலாம்....

அப்பத்தா இருந்தவரை
வீடு ஒன்றாகத்தான் இருந்தது.
போனாள் புண்ணியவதி
வீடு வேறானது, வாசல் வேறானது !

அய்யா என்ன நினைத்தாரோ
அவரவர்க்கு வீடு கட்டிவைத்துவிட்டார்
மனதில் கடமையைச் செய்யும்
கலைஞர் என்ற நினைப்பு

எங்கள் ஊரில் திருவிழாவாம்
எனக்கு விவரம் தெரிந்தவரையில்
இன்று வரை நான் பார்த்ததில்லை.
அம்மாவும்,சின்னம்மாக்களும்
அவரவர் ஊர்திருவிழாக்களுக்கு
எங்களைக் கூட்டிச் சென்று விடுவார்கள்.
எங்கள் ஊர்த் திருவிழா ஏனோ
ஈ மொய்த்துக் கொண்டிருக்கும்.
அய்யாவைப் பார்த்துக் கொள்ளவாவது
அப்பத்தா இருந்திருக்கலாம் ......

கோணி சாக்கைப் போட்டுத் திரிந்த
கோபாலுக்கு
கோனார் அய்யாவின்
சட்டையைக் கொடுத்து
உதவி செய்து
பாரிவள்ளலான
என் அப்பத்தா இருந்திருக்கலாம்....

என்னைக் காதலிப்பதாய்
சொன்னவள் என்னைவிட்டுப் போனதும்
எல்லா உண்மைகளையும்
யாரிடமாவது சொல்லி அழத்தோன்றியது
அப்பத்தா இருந்திருக்கலாம்.....

ஊர் ,வீடெல்லாம் கிழவிகள் இருக்க
எங்கள் அப்பத்தா மட்டும்
எப்போதோ தேரில் ஏறி
வீதி உலா போய் விட்டாள்.
அப்பத்தா இருந்திருக்கலாம்.....

அய்யாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கும் அப்பாக்கள்
கடமையின் கர்மவீரர்கள்.
எங்கள் சந்தோசங்களை
கேட்டுக் கொள்ள நேரம் இல்லாது
வருவார்கள் போவார்கள்.
எங்கள் சந்தோசங்களை கேட்டு ரசிக்கும்
அழகு தேவதையாய்
அப்பத்தா இருந்திருக்கலாம்.....

பிள்ளைகள் அப்பாக்களிடம்
அதிகம் பேச முடிவதில்லை.
எடுத்துச் சொல்ல நாங்கள் முருகனாகவும் இல்லை.
ஏற்றுக்கொள்ள அவர்கள் சிவனாகவும் இல்லை.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளைத்
திட்டும் அப்பாக்களை , பேரனை ஏண்டா திட்டுற?
எனக் கேட்க
அப்பத்தா இருந்திருக்கலாம் .....

சின்ன வயத்தில் கூட்டாஞ்சோறு
ஆக்கிச் சாப்பிட்டோம்
இன்று கூடு வேறு
சோறு வேறாகிப் போனது.
ஒரு பானைச்சட்டியில்
பொங்கல் வைத்து
ஊருக்கே தர மனசு வைச்சு இருந்த
எங்க அப்பத்தா இருந்திருக்கலாம்.......

இப்படிக்கு,
சிங்கப் பேரன்களும்,
செல்லப் பேத்திகளும்.





தோழமை தேசம் ...

நலமாகட்டும் பயணங்கள்
நம் பிரார்த்தனைகளில்....
உனக்காக நானும்
எனக்காக நீயும் செய்யும்
பிரார்த்தனைகளால் மட்டும் தான்
நம் தேசம்
வாழ்ந்து கொண்டிருக்கிறது....
வாழ்க நம் தோழமை தேசம்
மதங்கள் மறந்த மனித நேசம்.........

களவாணி...


என்னிடம் பேசாதே
எனச் சொல்லிவிட்டு
என்னை காதலித்துக் கொண்டிருக்கும்
களவாணி நீ !
ஆயிரம் தேவதைகள் இருந்தாலும்
இந்த அன்புக் கிறுக்கனை
என்னை மட்டும் பார் என
ஆசை சொல்லும் களவாணி நீ
முகவரி தெரியாமல் நிற்கும் பெண்ணிடம்
சாதாரணமாய் நான் பேசிக்கொண்டிருக்கையில்
உன் முகத்தில் தெரியும் கோபத்தை மூக்கில் வைத்து முறைத்துப் பார்க்கும் களவாணி நீ!
ஆயிரம் முறை கேட்டாலும்
எனக்கு ஏதும் வாங்கி
வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டு
வீட்டிற்குள் நான் வந்ததும்
என்ன வாங்கிவந்தேன்
என எட்டிப்பார்க்கும் அசட்டுக் களவாணி நீ!
நான் முத்தம் தர வருகையில்
கண்களை மூடிக்கொள்வாய்
காதல் பேசச் சொல்வாய். நீ
கண்கள் மூடிக் கொண்டதாய்
நான் திரும்பிப் போகும் போது
என் சட்டையை பிடித்து
முத்தம் கேட்கும் முரட்டுக் களவாணி நீ!
திருவிழாவில்
மாடு பிடிக்கச் செல்லும்
என்னிடம்
என்னை வீழ்த்திவிட்டு
எந்த மாட்டை வேண்டுமானாலும்
பிடித்துக்கொள் என
கறுப்புக் கலர் கண்ணாடி போட்டு
சவ்வரிசி ஐஸ் தின்று என்னிடம் சிரிப்புச் சித்திரவதை
செய்யும் குறும்புக்கார களவாணி நீ!
என்னைத்தான் காதலிப்பேன்
என்னைத்தான் கட்டிக்கொள்வேன்
என உன் ஆயி அப்பனிடம் முரண்டு
செய்யும் போது
என் சின்ன இதயம்
சிரிச்சுப் பூக்குதடி என் செல்லக் களவாணி!
கையில் மருதாணி சிவக்கவில்லை
வாயில் போட்ட வெத்தலை சிவக்கவில்லை என்றதும்
கண்கள் சிவந்து போய்
நீ என்னைக் காதலிக்கிறாயா ?
இல்லையா ? என
கண்ணீரில் கரையும் நீ
என் இதயம் திருடிய
காதல் களவாணி...

Tuesday, July 27, 2010

நிலா- நட்சத்திரம் உரையாடல்


நட்சத்திரம்: நிலா ஒரு தேயும் பொருள்


நிலா: நட்சத்திரங்கள் எல்லாம் வெள்ளைப் பொய்கள்


நட்சத்திரம்: எங்களால் நிலவாக மாற முடியும்


நிலா: எப்போதும் நான் நிலாதான், என்னைப் போல் மாற முயற்சிப்பதே உங்களின் தோல்வி . உங்கள் தோல்வியால் நான் அறிவிக்கப்படாத நட்சத்திரமாகிவிட்டேன் .


நட்சத்திரம்: நாங்கள் கோடிக்கணக்கானவர்கள்.....


நிலா: உங்கள் அத்தனைக்கும் அட்சயம் நான்தான் .....ஒரு தேசம் ,ஒரு இளவரசி....


நட்சத்திரம்: நாங்கள் மறைவதே இல்லை.அமாவாசை அன்று நாங்கள் தான் நிலா......


நிலா: நாங்கள் மறைவோம். ஆனாலும் அன்று நாங்கள் நீங்களாய்....


எனக்கில்லாத முத்தங்கள்
வானத்தில் நட்சத்திரங்களாய்
கிடக்கட்டும்
எனக்கான நிலவாக
நீ மட்டும் இரு..

முத்துக்கள் தரவில்லை என
வருத்தப்படாதே
நட்சத்திரங்கள் எல்லாம் உனக்குத்தான்

நீ எனக்காகத் தந்த
முத்தங்கள் எல்லாம் வனத்தில் நட்சத்திரங்களாய்....

பட்டாம்பூச்சியும் காதல் பூக்களும் ...

ஒரு பட்டாம் பூச்சிக்கு
எத்தனை சிறகுகள்....
பாவம் காதல்
பூக்கள்...
சொல்லாமல் போகாதே
பட்டாம் பூச்சியே
உன்னை நினைத்து
துடித்து விழுகின்றன
என் தோட்டத்து ரோசாக்கள்........

முத்தம் இல்லாத காதல்....




முத்தம் இல்லாத காதல்

என்பது ஊறுகாய்

இல்லாத தயிர் சாதம் போல......

அய்யனாரின் மீசை ....

ஊர்க்கடைசியில் இருக்கும்
அய்யனார் கோவிலுக்கு
நீ என்னை வரச் சொல்லும்
போதெல்லாம்
எனக்கு பயமாய் இருக்கும்.
அய்யனாரின் மீசை
உன் அப்பாவை ஞாபகப்படுத்துவதால்....

விழுதுகள்....

இன்று முதல்
எனக்குச் சுதந்திரம்!
என் புத்தகப் பையை
உன் தோல்களில் மாட்டிவிட்டு
சொப்பனம் காணும் சுதந்திரம்.....
உன் விழுதுகள் எனக்குத்
தோழமை தரும்
கரங்கள் என்பது
யாருக்குத் தெரியும்?
என் சிநேகிதனும் நானும்
சிநேகித்த நிமிடங்கள்
உன் நிழல்களில்தான் ....
படிக்கச் சொல்லி பள்ளிக்கு
அனுப்பும் அப்பா,
படிக்கவில்லை எனச் சொல்லி
வீட்டிற்கு அனுப்பும் ஆசான் ,
இவர்களுக்கு மத்தியில்
நீ மட்டும் எனக்கு பிடித்தமான
மரக்குரங்கு விளையாட்டு விளையாட
அங்கும் இங்குமாய்
கரங்கள் நீட்டிக்கொண்டு ...
என் வீடும் ,பள்ளியும் ஏனோ தூரமாய்
நீ மட்டும் எனக்கு நேசமாய் !
உன் வெறும் பொழுதுகளின் அழையா
விருந்தாளி நான்,
என் விடைபெறமுடியாத
தோழமைக்குச் சொந்தக்காரி நீ
கிளைகள் பிரிந்து இருந்தாலும்
உறவுக்குத் தோழமை
நீட்டும் உன் கரங்கள்
நேசத்தின் விருட்சமாய்.....

Monday, July 26, 2010

அன்பு சொல்லடி,அது போதும்....

தூங்காத இரவுகள்,
துடிக்கின்ற இதயம்,
தூரத்து நட்சத்திரம்,
தொலையாத நினைவுகள்
தயங்காத மனது என,
ஆசை ஆசையாய் அத்தனை வைத்திருக்கிறேன்.
அன்பு சொல்லடி,அது போதும் எனக்கு.....

கோமாளிக்கும்,ஏமாளிக்கும் கடிதம் ...


இனி கடிதம்
எழுதும் முன்,
ஒன்றை நினைவில் கொள்.
கடிதம் அவனுக்கு!
மறந்தும் என் பெயர்
எழுதிவிடாதே......
இப்படிக்கு
கோமாளி.

நிழல் மரணம்...



அன்று காதலில்
ஒற்றைப் பனைமரத்தின்
நிழலில் நீயும் நானும்
கூடிக்கிடந்த போது
நிழல்களும் களித்தன
ஆனால், இன்று
வெட்டப் பட்ட பனைமரத்தின்
கீழே நான் அசைவுகளற்று,எனில்
என் நிழல்கள்.......

வெற்றியின் விடைகள்....

விழுகாத பூக்கள்,
தெரியாத காற்று,
மறையாத வானம்
அழகான அருவி
அனைத்தும் உன் தொலையாத
நினைவு சொல்லும்
வெற்றியின் விடைகள்....
பிரிந்த காலங்களில் வலியைத்தாங்கி ஒரு பிரவேசம்
வானம் கலைந்திருக்கிறது,
பூமியில் வெளிச்சம் இல்லை
நிலா எங்கே
கடல் கொந்தளிக்கிறது
கடவுளும் செத்துப் போகிறான், நீ விட்டு போன என் காதல் உண்மை என்பதால் ..

காதலிக்க ஆரம்பிக்கையில்.......

பருவம் என்னில் வந்த நேரம்,
பக்குவம் இல்லாதது பெரும் பாரம்,
இந்தக் காலத்தில் பூக்கள் பார்க்க
ஆசைப்படுகிறது மனம்,
புதையல் தேடுது மனம் ,
வயதுக்கு வந்ததாய் மனம்,
வாலிபம் தேடுது மனம்,
அத்தனைக்கும் ஆசைபடுகிறது.....
எல்லாவற்றிலும் எல்லோருக்காகவும் என பாசமாய் இருந்தவள் , இப்போது தனக்காக என யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.அவள் இப்போது புது அவதாரம் எடுத்துவிட்டாள். உண்மையை உலகமாக்கி வாழ்ந்தவள் , உலகை ஏய்க்கத் தொடங்கிவிட்டாள்.
அவனைக் காதலிக்க ஆரம்பிக்கையில்.......

பிரார்த்தனை ....

எங்கள் பிரார்த்தனைகளை
ஏற்றுக்கொள்ளாமல்
எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்
அந்த அழகான விடியலை?


அன்பான மகன்,
அப்பாவை கேட்டுக் கொண்டிருக்கும்
பேரன், அழுபவர்களுக்கு
ஆறுதல் சொல்ல முடியாமல்
அன்பு சொல்லும் அம்மா,



என் பிள்ளையை கொன்றுவிட்டு
என்னை மட்டும் ஏன் வைத்திருக்கிறாய்
என பிரார்த்தனைகளில்
தன்னை வருத்தி கொண்டிருக்கும் மூதாட்டி...

சிநேகம் சொல்லும்
சிட்டு குருவிகளின்
சங்கீதம் தொலைத்து ,
பசுமை நிறைந்த
எங்கள் தாயகத்தை
போர் நிறைத்து புகையாக்கிய
உங்கள் கரங்களில் ரோஜா பூ
எங்கள் கரங்களில் இன்னும்
அடிமை விலங்குகள் !
போர் முடிந்ததாய்
புத்தகங்களை மூடி வைத்து விடாதீர்கள் .
அன்பு மகனை இழந்த தாய்,
கணவனை இழந்த மனைவி,
கால் இழந்த குழந்தை
கற்பிழந்த காதலி,
காதலை இழந்த காதலன் என
இனி தான் எங்கள் கதை ஆரம்பம்....

நின்று போன யுத்தத்தில் ,
மிச்சம் இருக்கும்
எங்கள் தேசத்து
இளங்கலை பயிர்கள் உணவுக்கின்றி
உறவுக்கின்றி
ஒரு ............................
வார்த்தைகளால் நிரப்ப முடியவில்லை
அம்மா வலிக்கிறது ............
எங்கள் தேசத்தில், எங்கே அந்த அழகான விடியல்?....

Sunday, July 25, 2010

எழுத்துப் பிழைகள் ....






அவர்களுக்காய்....




எனக்குள் உள்ள
உயிர் எனபது நீ தந்தது
அழகான வாழ்க்கை பிழையானால்
நான் என்செய்வது?
இது என் பிழையா
இறைவா
உன் எழுத்துப் பிழையா?
சிலர் பாவம் என்பார்
சிலர் போ ... போ.. என்பார்

உடல் கூறிலே ஒரு மாற்றமே
உரு மாற்றமே தவிர
ஒரு மாற்றமும் இல்லை....
ஆசைகள் நிரப்பி
அழகாய் வாழ எனக்கும் ஆசைதான்
அர்த்தம் இல்லாத
வார்த்தைகளின் அட்சதைகளில் மட்டுமே வாழ்ந்து
அன்புக்கு ஏங்கும்
நாமும் மனித பிறப்பு தான் ....
அவன் என்று சொல்வார்,ஐயோ!
அவள் என்றும் சொல்வார்...
இறைவா !
நான் யார் என்று நீ சொல்.....
இது ஞானப் பிறப்போ
இல்லை ஈனப் பிறப்போ
இதுவும் ஒரு பிறப்பென்று
உலகிற்கு உணர்த்து
இல்லை எனில் வாழ்க்கை விட்டு
என் உயிர் வீழ்த்து
இறைவா நீ அறிவாய்
உன் எழுத்து பிழைகளும்
உயிர் என்பதை.....


Saturday, July 24, 2010

தோழமைக்கு ...


மெல்லப் பேசும் தோழமைக்கு நல்ல
வாசகம் தேடிக்கொண்டிருக்கிறேன் .....

அய்யாவின் சட்டையும் கண்திருஷ்டி பொம்மையும்


அய்யாவின்
வெள்ளைச் சட்டையை ,
தோட்டத்து பொம்மைக் காவலுக்கு
உடுத்தி அழகு பார்க்கிறாள்
அப்பத்தா !
என்ன கோவமாய் இருக்கும்....

எங்கள் ஊர்...


தூரத்தில் தெரியும்
ஒற்றைப் பனை மரம்
ஆற்று வெள்ளத்தில்
அடித்துச் செல்லப் பட்ட குதிரைகள் ,
அன்னார்ந்து பார்க்கச் சொல்லும்
அய்யனார் சிலை ,
சுமைதாங்க மனம் இன்றி
மர நிழல் தாங்கி நிற்கும் சுமைதாங்கிக் கல் ,
பச்சைப் பசேல் என்று கிடக்கும் வயல் வெளியில்
காக்கை எச்சம் போட்டது தெரியாமல்
காவல் நிற்கும் பொம்மை காவல் காரன்
அடர்ந்த மரங்கள் ,அதில் அழகாய்
வீடு கட்டி ரசிக்கும் தூக்கணாங்குருவிகள் ,
தெருவோரச் சிறுவர்களின் சிரிப்பும் ,விளையாட்டும்
திண்ணை வைத்த வீடுகளும் என
எங்கள் ஊரை இன்னும் அழகாய்
சொல்ல வரிகள் தேடிக்கொண்டு இருக்கிறேன் வாய்க்காலில் அமர்ந்து....

இப்படிக்கு ....


என் பேரன் என்னைத் தொட்டுப்
பேசும் போதெல்லாம் நான்
செத்துப் பிழைக்கிறேன்.
என் மகன் என்னை திட்டிப்
பேசும் போதெல்லாம்
செத்துப் போகிறேன்.
வாழ வந்தவளை வைத்துக்கொண்டு
வாழ வைத்தவளை வீதியில் வைத்த தருமன்
என் மகன்....
உள்ளத்தில் இடம் தந்தவளுக்கு
இல்லத்தில் இடம் இல்லையாம்.
இன்னொருநாள்
என்மகனும் வருவான் ,....
அவன் வருவது
என்னைப் பார்ப்பதற்காக
மட்டும் இருக்கட்டும்,
என் பேரனும் அந்தத் தவறைச்
செய்யாதிருக்கட்டும் ....
என் வலி எனக்குப் பலம்
என் பிள்ளைக்கு வலித்தால் எனக்கும் வலிக்கும்,
நான் தாய் அல்லவா .....
இப்படிக்கு
காத்திருக்கும் தாய் மனம் .

Thursday, July 22, 2010

இலட்சியம்


நிச்சயமில்லாத இரவுகள் இருக்கலாம்,
லட்சியமில்லாத வாழ்க்கைதான் இருக்கக் கூடாது....