Sunday, August 15, 2010

தாய்ப்பால்...



அயலான் தேசத்தில்
அந்நிய நிறுவனத்தில் என் இந்தியச் சகோதரனுக்கு
சுதந்திரம் சொல்லி இனிப்பை வழங்கிய போது
தவிப்பாய்க் கிடந்தவனுக்கு தாய்ப்பால் கொடுத்த சந்தோஷம்.....

எங்கள் சுதந்திரத்தில் இனி என்றும் ....

எங்கள் சுதந்திரத்தில் இனி...
ஆயிரம் பூக்கள் பூக்கட்டும்
அடிமை விலங்குகள் உடையட்டும் !
பாசக்கரத்தை நாம் நீட்டி
நேசம் மட்டும் நாம் பேசுவோம்!
பாரே போற்றும் பாரதம் ! ஒற்றுமை
பக்குவம் சொல்லும் ஓர் ரதம்!
எனப்பெயர் பெறட்டும்!
எங்கள் சுதந்திரத்தில் இனி என்றும் ....
சிநேகம் என்றும் சிலிர்க்கட்டும்.
சின்னக்குழந்தைகள் சிரிக்கட்டும்
செல்லப் புன்னகை பூக்கட்டும்
சிறகுகள் நம்மில் விறியட்டும்
எங்கள் சுதந்திரத்தில் இனி ....
வானம் முட்டும் சந்தோஷம்
என் ஏழைக்கூலிக்கும் கிடைக்கட்டும்
ஏற்றம் பிடிப்பவன் கைகளுக்கு
நலமாய் எல்லாம் கிடைக்கட்டும்!
எங்கள் சுதந்திரத்தில் இனி ....
தரிசாய் கிடக்கும் நிலமெல்லாம்
பரிசாய் மரங்களை நிரப்புவோம்!
ஆணும் பெண்ணும் சமமென்னும்
அற்புதம் புரிந்து வாழ்வோம்!
எங்கள் சுதந்திரத்தில் இனி....
களவுகள் மனம் திருடுவதாக மட்டும் இருக்கட்டும்!
திருடர்களும் திருந்தட்டும்
கொள்ளைக் காசுகள் வேண்டும் மனம் இல்லாது,
கொடுத்து உதவும் மனங்கள் பிறக்கட்டும்
எங்கள் சுதந்திரத்தில் இனி...
வெள்ளைக்காரன் எங்கள்
வீட்டுக் கூலிக்கு வரட்டும்!
அப்போதும் எங்கள் மனம் விருந்தோம்பல்
மட்டும் பேசட்டும்!
தியாகம் செய்த தியாகிகள்
என் தேசம் வளர்த்த தலைவர்கள்
யாரும் மறவாத சத்தியத்தை நாம் என்றும்
மறவாத மனமிருக்கட்டும்.
எம் இந்தியதேசம் வண்ணமாய்
உலகிற்கு ஒளிக்கட்டும்.
எங்கள் வாழ்த்துக்கள்
வானம் கடந்து நட்சத்திரங்களாய்
பூக்கட்டும் !

Sunday, August 1, 2010

காதலும்,நட்பும்....



நட்பு,
எல்லோரிடமும்
என்னை நேசிக்கச்
சொன்ன இதயம் !



காதல்,
எல்லோரையும் விட்டுவிட்டு
என்னை மட்டும் நேசி
எனச் சொல்லும் இதயம்!

நட்பு,
தோழனை முன்னிறுத்தி
பின்னிருக்க ஆசைப்படும் இதயம் !

காதல் ,
காதலை முன்னிறுத்தி
காதலனை பின்னிறுத்தி
அவன் கைபிடிக்குள்
நிற்க ஆசைப்படும் இதயம்!

நட்பு ,
எவ்வளவு உப்புப்
போட்டு சாப்பிட்டாலும்
வீராப்பு மட்டும் வராது.
திட்டிக்கொண்டாலும்,சண்டை போட்டாலும்,
அந்த நிமிடமே
திரும்பப் பேசிக்கொண்டிருக்கும் இதயம்!

காதல்,
ஒரு முறை பேசவில்லை
என்பதற்காக ஓயாது அழைத்து
பின் ஒரு நாள் முழுதும் பேசாமலிருந்து
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
அடுத்த நாள் அமைதியாக
மன்னிப்பு கேட்கும் இதயம்!

நட்பு,
அன்பில் முடிவில்லாத முடிவிலி.
விட்டு விட முடியாத பாசம் !
அது தான் நட்பு.

காதல்,
அன்பின் சண்டைகள்
முடிவில்லாத முடிவிலி .
விட்டு விலகமுடியாத நேசம்!
அது தான் காதல்.

நட்பு,
சுதந்திரமாய்
பறக்கும் பட்டம்!

காதல்,
சுதந்திரமாய்
பறக்கிறேன் எனச் சொல்லி
கட்டிப் போடப் பட்டிருக்கும்
கொடி!

நட்பு,
எல்லோரும் சமம்
எனச் சொல்லும் இதயம்!

காதல்,
நீயும் நானும் மட்டும் சமம்
எனச் சொல்லும் இதயம்!

காதலுக்கு உதவி தேவை என
நண்பனிடம் வந்த போது
நட்பில் நம்பிக்கை வைத்து
காதல் வெற்றி பெற்றது.
யாருமில்லாமல் நின்றவர்களை
சேர்த்துவைத்த போது
நட்பு வெற்றி பெற்றது!


என்னைப் பொறுத்தவரையில்
காதலுக்கும் , நட்பிற்கும்
ஒரு நூலிழை வித்தியாசம் தான் .
ஆனாலும்,
நட்பு சற்று உயரத்தில்!

கேட்டுப் பாருங்கள் காதலர்களை
தங்களை
சேர்த்து வைத்த நண்பன் பற்றி .....