Wednesday, July 28, 2010

அப்பத்தா இருந்திருக்கலாம்....


அப்பத்தா!
என் அப்பாவைப் பெற்றவள்,
இன்னும் சிலகாலம் இருந்திருக்கலாம்!
போய்விட்டாள் புது உலகம் தேடி!
ஊரே மெச்சும் அழகியாம் என் அப்பத்தா!

அய்யாவிற்கு அப்பத்தா
கிடைத்தது போல
என் அப்பாவிற்கு என் அம்மா கிடைத்தார்.
தன்னை விட அழகாய் மருமகள் வந்தால் என நினைக்காமல்
தாயாகவே இருந்து வந்தாளாம் .
அண்ணாவைத் தூக்கி வளர்த்தவள்
ஐயோ, நான் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே போய்விட்டாள்.
என் அப்பத்தா போய்விட்டாள்.

தங்கமாய் நான் சிரிக்க தாலாட்டத் தாய் இருக்காள்
தரணி ஆளச் சொல்ல
எனக்காக என்
அப்பத்தா இருந்திருக்கலாம்....

அப்பத்தா இருந்தவரை
வீடு ஒன்றாகத்தான் இருந்தது.
போனாள் புண்ணியவதி
வீடு வேறானது, வாசல் வேறானது !

அய்யா என்ன நினைத்தாரோ
அவரவர்க்கு வீடு கட்டிவைத்துவிட்டார்
மனதில் கடமையைச் செய்யும்
கலைஞர் என்ற நினைப்பு

எங்கள் ஊரில் திருவிழாவாம்
எனக்கு விவரம் தெரிந்தவரையில்
இன்று வரை நான் பார்த்ததில்லை.
அம்மாவும்,சின்னம்மாக்களும்
அவரவர் ஊர்திருவிழாக்களுக்கு
எங்களைக் கூட்டிச் சென்று விடுவார்கள்.
எங்கள் ஊர்த் திருவிழா ஏனோ
ஈ மொய்த்துக் கொண்டிருக்கும்.
அய்யாவைப் பார்த்துக் கொள்ளவாவது
அப்பத்தா இருந்திருக்கலாம் ......

கோணி சாக்கைப் போட்டுத் திரிந்த
கோபாலுக்கு
கோனார் அய்யாவின்
சட்டையைக் கொடுத்து
உதவி செய்து
பாரிவள்ளலான
என் அப்பத்தா இருந்திருக்கலாம்....

என்னைக் காதலிப்பதாய்
சொன்னவள் என்னைவிட்டுப் போனதும்
எல்லா உண்மைகளையும்
யாரிடமாவது சொல்லி அழத்தோன்றியது
அப்பத்தா இருந்திருக்கலாம்.....

ஊர் ,வீடெல்லாம் கிழவிகள் இருக்க
எங்கள் அப்பத்தா மட்டும்
எப்போதோ தேரில் ஏறி
வீதி உலா போய் விட்டாள்.
அப்பத்தா இருந்திருக்கலாம்.....

அய்யாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கும் அப்பாக்கள்
கடமையின் கர்மவீரர்கள்.
எங்கள் சந்தோசங்களை
கேட்டுக் கொள்ள நேரம் இல்லாது
வருவார்கள் போவார்கள்.
எங்கள் சந்தோசங்களை கேட்டு ரசிக்கும்
அழகு தேவதையாய்
அப்பத்தா இருந்திருக்கலாம்.....

பிள்ளைகள் அப்பாக்களிடம்
அதிகம் பேச முடிவதில்லை.
எடுத்துச் சொல்ல நாங்கள் முருகனாகவும் இல்லை.
ஏற்றுக்கொள்ள அவர்கள் சிவனாகவும் இல்லை.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளைத்
திட்டும் அப்பாக்களை , பேரனை ஏண்டா திட்டுற?
எனக் கேட்க
அப்பத்தா இருந்திருக்கலாம் .....

சின்ன வயத்தில் கூட்டாஞ்சோறு
ஆக்கிச் சாப்பிட்டோம்
இன்று கூடு வேறு
சோறு வேறாகிப் போனது.
ஒரு பானைச்சட்டியில்
பொங்கல் வைத்து
ஊருக்கே தர மனசு வைச்சு இருந்த
எங்க அப்பத்தா இருந்திருக்கலாம்.......

இப்படிக்கு,
சிங்கப் பேரன்களும்,
செல்லப் பேத்திகளும்.





No comments:

Post a Comment