Saturday, July 31, 2010

நட்பின் பதிவுகள்...


கடந்து போன
நாட்களிலே நடந்து போக
நினைக்கிறது மனசு...
நீயும் நானும் சண்டை போடாத
நாட்கள் இல்லை
ஆனாலும் , நேரம் தெரியாமல் நாம்
சுற்றித் திரிவோம்...
தூரக் கிடக்கும் நட்சத்திரங்களுக்குள்,
நீயும் நானும் எங்கே என
தேடித் பார்த்து தேகம்
சிலிர்த்துக் கிடந்த நாட்கள்
எப்பக்கிடைக்கும் என் நண்பா?

ஊரே பார்க்கும் ஒற்றை நிலாவிடம்
நாங்கள் மட்டுமே நண்பர்கள்
என்று வானம் பார்த்து வள்ளுவம் பேசிய
நாட்கள் எப்பக்கிடைக்கும் நண்பா?

விட்டுச் சென்ற காதலியை
மறக்கச் சொல்லி எனக்காக
கடற்கரையில் கால் நனைத்துக் கிடந்த நாட்கள்.
எனக்கான நட்பு பேசிய அந்த நிமிடங்கள்
எப்பக் கிடைக்கும் நண்பா?

தாமதமாய் கிளம்பியதாய் சொல்லி ,
கழிவறையிலும் ,குளியலறையிலும்
நாம் சண்டை போட்டுக் கொள்ளும் நிமிடங்கள்,
எப்பக் கிடைக்கும் நண்பா?

அவசரவசரமாய் கல்லூரிக்கு
கிளம்புகையில் உன் சட்டையை நானும்
என் சட்டையை நீயும் போட்டு
அழகு பார்த்துக் கொண்ட நாட்கள்
எப்பக் கிடைக்கும் நண்பா?

நீ என் வெற்றிக்குக் காரணம்
என முடித்துக் கொள்ள விரும்பவில்லை.
என் தோல்வியில்
எனக்காக என்னோடு நின்றவன் !
என் கடந்த காலத்தின் அர்த்தமுள்ள
பதிவுகளாய் நம்
நட்பைச் சொல்லிக் கொள்வதில்
பெருமைப் படுகிறேன்....
திரும்பிப் பார்க்கமுடியாத
தூரம் போனதாய்ச் சொல்லி
விரும்பிப் பார்க்கக் காத்திருக்கும் இதயம்,
விடை பெரும் நேரத்தில்
வெறுமைகளை நிரப்பி , விடை பெற்றதும்
நட்பின் நினைவுகளை நிரப்பி வைத்திருக்கும்
ஆள் இல்லாத வகுப்பறைகள்,
கனவுகள் சுமந்து கிடந்தவனின்
கிறுக்கல்களையும் ,ஓவியங்களையும்
சுமந்து நிற்கும் வகுப்பறை நாற்காலிகள்,
திருப்பிக் கொடுக்காத
டீக்கடைக்காரன் பைசா பாக்கி ,
சோடி சேர்ந்த கல்லூரிக்காதல்,
சொல்லாமல் பிரிந்த உண்மைக்காதல்,
தேர்வுக்குப் படிக்காமல்
உன்னைப் பார்த்து தேர்வு எழுதி
நான் மட்டும் தேறியதாய் தெரிந்ததும்
உனக்கு ஆறுதல் கூறிய நிமிடங்கள்,
கல்லூரிவிழா , களித்துக் கிடந்த வெற்றிகள் ,
கலங்கிப்போன தோல்விகள்
எல்லாவற்றிற்கும் இடையில்
எனக்காக எப்போதும் நிற்கும்
உன் தோழமையின் ஆளுமை!

எல்லாம்..
திரும்பிப்பார்க்கையிலே,
தூரத்தில சின்னமா
ஒரு புள்ளியாக ...
அந்த நினைப்பு தான் நட்பா நண்பா ?
என் அன்புக்கினியவனே
எப்பக் கிடைக்கும் அந்த
அழகிய தருணம் ?முடிந்ததாய்
என் வார்த்தைகளுக்குப் புள்ளிகள்
வைக்கும் போது
உனக்குள் தொடந்திருக்கும்
நம் தோழமை நினைவுகளின் ஆளுமை!
நண்பா !
எங்கேயடா நாம்
துள்ளித்திரிந்த நாட்கள்?....

No comments:

Post a Comment